டிடிவி தினகரன் மீதான பெரா வழக்கு; 3 வாரத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில், அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாகவும், மேலும் அந்த வங்கியில் முறைகேடான முறையில் அந்த பணம் வைப்பு தொகை வைக்கப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் மீது 2 வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேற்கண்ட அந்நிய செலாவணி, பெரா வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி டிடிவி.தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகள் தொடர்பாக முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை தரக்கோரி, உயர்நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் கேட்கும் ஆவணங்களை தரும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கண்ணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஹரன், ‘பெரா வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் கேட்டோம்.

ஆனால் அவர்கள் ஆவணங்களை தரவில்லை’ என்றார். அமலாக்கத்துறை தரப்பில், ‘விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது. இடையே மனுதாரருக்கு ஆவணங்களை தரவேண்டிய அவசியமில்லை’ என்று கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘சீலிடப்பட்ட கவரில் வரும் 3 வாரத்தில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். டிடிவி தினகரன் தரப்பும் பதில் அளிக்க வேண்டும்’ எனக்கூறி ஏப்ரல் மாதத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories: