பயங்கரவாதிகளின் தலைவர் நேதாஜி: சர்ச்சை பதிவுக்கு மன்னிப்பு கேட்ட பாஜக எம்எல்ஏ

அகமதாபாத்: பயங்கரவாதிகளின் தலைவர் நேதாஜி என்று குறிப்பிட்டு பேஸ்புக்கில் பதிவிட்ட குஜராத் பாஜக எம்எல்ஏவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால், அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ யோகேஷ் படேல் என்பவர், நேற்று அவரது பேஸ்புக் பக்கத்தில், ‘நேதாஜி  சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போது நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். இந்திய தேசிய  காங்கிரசின் தலைவராக இருந்தார். பயங்கரவாதிகள் குழுவின் தலைவராக  இருந்தார்.

சோசலிச இயக்கத்தை ஆதரித்தார்’ என்று பதிவிட்டிருந்தார். இவரது பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும், எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில், எம்எல்ஏவின் சர்ச்சைக்குரிய பதிவு பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.

பின்னர் அவர் வெளியிட்ட மற்றொரு பேஸ்புக் பதிவில், ‘பயங்கரவாதி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மொழி பெயர்த்ததில் தவறு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: