ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்-எஸ்பி அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் முற்றுகை

ஊட்டி :  லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை ரத்து செய்யக் கோரி லாரி உரிமையாளர்கள் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நீலகிரி  மாவட்டத்தில் மட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் தற்போது போலீசார்  அங்காங்கே சாலையில் நின்றுக் கொண்டு இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக  வாகனங்கள் வரை அபராதம் விதிப்பது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, நீலகிரி  மாவட்டத்தில் பெரும்பாலான காவல் நிலையங்களில், சட்டம் ஒழுங்கு தொடர்பான  வழக்குகள் அதிகம் இல்லாத நிலையில், தங்களுக்கு நிர்ணயிக்கும் வழக்குகளை  அந்தந்த மாதத்திற்குள் முடிக்க சாலைகளில் நின்று வாகன  ஓட்டுநர்களுக்கு வழக்குகள் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும்,  சிலர் முறையாக அனைத்து ஆவணங்களை வைத்திருந்தாலும், ஏதேனும் ஒரு வழக்கு  பதியப்படுகிறது. இது மட்டுமின்றி, தற்போது ஆன்லைன் மூலம் வழக்குகள்  பதியப்படும் நிலையில் சாலையோரங்களில் நின்று கொண்டிருக்கும் வாகனங்கள்,  பெட்ரோல் பங்குகளில் நிற்கும் வாகனங்கள் என வாகனங்களுக்கு அபராதம்  விதிப்பது தொடர் கதையாக உள்ளது.

குறிப்பாக, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு  அதிகளவு அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை கண்டித்து  நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும்  கூடலூர் பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுநர்கள் சங்கங்கள் சார்பில் நடராஜ்,  குன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி கணேசன் தலைமையில் லாரி  உரிமையாளர்கள் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து  எஸ்பிஐ சந்தித்து இது தொடர்பான மனு ஒன்றையும் அளித்தனர். தொடர்ந்து லாரி  ஓட்டுநர் சங்க தலைவர் நடராஜ் மற்றம் கணேசன் ஆகியோர் கூறியதாவது: நீலகிரி  மாவட்டத்தில் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பது தற்போது  அதிகரித்து வருகிறது.

சாலையோரம், பெட்ரோல் பங்க், பார்க்கிங்குகளில்  நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்  வாகனங்களின் பதிவு எண்களை குறித்துக் கொள்ளும் போலீசார் என்ன குற்றம் என்றே  கூறாமல் ஜெனரல் அபன்ஸ் என்று அபராதம் விதிக்கின்றனர். மேலும், ஒப்பந்த  அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு  தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது.

சாலை விதிகளை பின்பற்றவில்லை. சீட்  பெல்ட் அணியவில்லை. தலைகவசம் அணியவில்லை போன்று முரணான காரணங்களுக்காக  அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் சம்பந்தமாக  வாகன உரிமையாளர் வாகனத்திற்கான காலாண்டு வரி, தகுதிச் சான்றிதழ், பர்மிட்  பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, இது போன்று ஆன்லைனில்  அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். வாகனங்களை நிறுத்தி  ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து குற்றம் இருப்பின் அபராதம் விதிக்க  வேண்டும். அதில், ஓட்டுநரின் கையொப்பத்துடன் என்ன குற்றம், ஓட்டுநரின்  பெயர், ஓட்டுநர் உரிமம் எண் ஆகியவற்றை ரசீதில் குறிப்பிட வேண்டும். ஆன்லைன்  மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: