நீதிபதி நியமன விவகாரத்தில் கொலீஜியத்துடன் ஒன்றிய அரசு மோதல்: நீதிபதிகள் தேர்தலை சந்திக்க வேண்டியதில்லை.! ஒன்றிய அமைச்சர் பேச்சு

டெல்லி: ஜனநாயகத்தின் மூன்று முக்கியத் தூண்களில் ஒன்றான நீதித்துறை, சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும் இயங்கிவருகிறது. நீதித்துறைக்கான சுதந்திரத்தை இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் அமைப்பால் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்யும் நடைமுறை 1998-ம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறது.

இந்த முறையை மாற்ற வேண்டும் என்பது பாஜக அரசின் நிலைப்பாடு. எனவே கொலிஜியம் முறைக்கு மாற்றாக ‘தேசிய நீதிபதிகள் நியமனக் குழு’ என ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றியது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய நீதிபதிகள் நியமனக் குழுவை அமைத்து ஒன்றிய அரசு இயற்றிய சட்டத்தை 2015-ம் ஆண்டு ரத்து செய்தது. அப்போதிலிருந்து ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் இந்த நடைமுறையை எதிர்க்கும் ஒன்றிய அரசு, ‘கொலிஜியம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை’ என்று சொல்லி வருகிறது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக கொலிஜியம் வழங்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒன்றிய அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான கொலிஜியத்தில் கே.எம்.ஜோசப், எஸ்.கே.கௌல் உள்ளிட்ட நீதிபதிகள் இடம்பெற்றிருக்கிறார்கள். தற்போது, கொலிஜியம் பரிந்துரைத்த மூன்று நீதிபதிகளின் நியமனத்துக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவிக்கிறது. இவ்வாறு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசுக்கும் கொலீஜியத்துக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீதிபதிகள் தேர்தலை சந்திக்க வேண்டியதில்லை என்றும், பொதுமக்களின் கண்காணிப்பை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். நீதிபதிகளையும், அவர்களின் தீர்ப்புகளையும் அவர்களின் மதிப்பீடுகளையும் பொதுமக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த சமூக வலைதள காலகட்டத்தில் எதையும் மறைக்க முடியாது என்றும் அவர் கூறினார். நீதித்துறையின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தினாலோ, அதன் அதிகாரம், மரியாதை, கண்ணியத்தை குறைத்தாலோ, ஜனநாயகம் வெற்றி பெறாது என்றும் அவர் கூறினார்.

கொலிஜியம் நடைமுறையை ஒழித்துக்கட்டிவிட்டு, தாங்கள் விரும்புகிற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஒன்றிய பாஜக அரசு உறுதியாக இருப்பது ஜக்தீப் தன்கர், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரின் பேச்சுகளிலிருந்து தெரியவருகிறது. நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது என்ற விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவருகிறது. தாங்கள் விரும்புகிற நபர்கள் நீதிபதிகளாக வர வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லப்படும் நிலையில்தான், கொலீஜியம் நடைமுறையை மாற்ற வேண்டும் என்பதில் ஒன்றிய பாஜக அரசு பிடிவாதமாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

Related Stories: