ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அணி வேட்பாளர் யார்? ஓபிஎஸ் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், 87 மாவட்ட செயலாளர்கள், 100க்கும் மேற்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், 26 அமைப்பு செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள் பலரும், ‘‘அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரண்டு பேரில் யார் பெரியவர்கள், யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகவும் செல்வாக்குள்ள, அதேநேரம் பொதுமக்களின் ஆதரவு பெற்ற நபரை நமது அணி சார்பில் வேட்பாளராக நிறுத்த வேண்டும்’’ என்பதை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் முக்கிய தலைவர் ஒருவர் பேசும்போது, ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் நாம் அதிக வாக்குகளை பெறுவோம். அதற்கான பணிகளில் கட்சி தலைமை ஈடுபடும். நமது அணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர், தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் நல்ல அறிமுகமான, அதே நேரம் சினிமா புள்ளியாக இருக்கலாம் அல்லது பெரும்பான்மை சமூகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவரை நிறுத்தலாமா என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: