அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயரை சூட்டினார் பிரதமர்

போர்ட் பிளேர்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவத்தினரின் பெயரை பிரதமர் மோடி நேற்று சூட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அந்தமான் மற்றும் நிகோபர்  தீவில் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி வீடியோகான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டார். விழாவில், அந்தமானில் அமைக்கப்படவுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிட மாதிரியை பிரதமர் திறந்து வைத்தார். மேலும்  21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதுபெற்ற ராணுவத்தினரின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி,  “இந்த தீவுகள் எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகமாக இருக்கும். சுதந்திர போராட்டத்திற்கான நேதாஜியின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று டெல்லியில் இருந்து, வங்கம் முதல் அந்தமான் நிகோபர் தீவுகள் வரை சிறந்த நாயகனுக்கு அஞ்சலி செலுத்தி அவருடன் தொடர்புடைய வரலாறு மற்றும் பாரம்பரியம்  பாதுகாக்கப்பட்டுள்ளது. 1943ம் ஆண்டு நேதாஜி முதல் முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்த இடம் அந்தமான் ஆகும் ” என்றார்.

Related Stories: