போலி செய்திகள் மக்களை திசை திருப்புகின்றன: தலைமை தேர்தல் ஆணையர் வேதனை

புதுடெல்லி: தேர்தல் நேரங்களில் சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் திசை திருப்பப்படுகின்றனர் என்று தலைமை தேர்தல் ஆணையர் வேதனை தெரிவித்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 17 நாடுகள் மற்றும் தேர்தல் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். ‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ``இந்தியாவில் தேர்தலின் போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அது குறித்து போலி செய்திகளை உண்மையை போன்று சித்தரித்து சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். இதன் மூலம் தேர்தல் மீதான மக்களின் கண்ணோட்டத்தை மாற்ற முயல்கின்றனர். இந்த போலி செய்திகள் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தி சீர்குலைக்கும் நோக்குடன் வெளியிடப்படுகின்றன. பொய்யை உண்மை என்று கூறி மீண்டும் மீண்டும் முன் வைப்பதன் மூலம் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்,’’ என்று வேதனை தெரிவித்தார். கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டை தொடர்ந்து ஆண்டு தோறும் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் முதல் சர்வதேச மாநாடு 2022ம் ஆண்டு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது.

Related Stories: