அரசு அலுவலகங்களில் தீ தடுப்பு ஒத்திகை: பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தீ தடுப்பு ஒத்திகை நடத்தப்படும் என பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் கூறினார். தமிழக தீயணைப்பு துறை மற்றும் மீட்புத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார்  முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில்  தீ தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. 10 மாடி கொண்ட கட்டிடத்தில் ஐந்தாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது போலவும், விபத்தில் சிக்கிய தலைமை செயலக பணியாளர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவது போலவும்  நடைபெற்ற ஒத்திகையில் 52 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது.

54 அடி உயரம் வரை செல்லக்கூடிய ‘ஸ்கை லிப்டர்’ என்ற தீயணைப்பு வாகனமும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீ விபத்தில் சிக்கிய தலைமை செயலக பணியாளர்களை உடனடியாக மீட்டது போலவும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி கொடுப்பது போலவும், தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தல் போன்ற ஒத்திகை தத்துரூபமாக மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து பொதுதுறை செயலாளர் ஜெகநாதன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதுபோன்ற ஒத்திகைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.  ‘‘தனியார் கட்டிடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நின்று தீயை அணைப்பதற்கு ஏற்ற இடவசதி இருக்கிறதா என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்படும்’’ என தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் தெரிவித்தார்.

Related Stories: