விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார் மேயர் பிரியா..!

சென்னை: மக்கள் சேவையில் பொதுசுகாதாரத்துறையின் நூற்றாண்டு நிறைவையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைப் பணியாளர்களிடையே நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் இன்று (23.01.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறையின் நூற்றாண்டு நிறைவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இவற்றின் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுசுகாதாரத்துறையின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தப் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன.  முதற்கட்டமாக மண்டல அளவிலும், இரண்டாவது கட்டமாக மண்டல அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி அளவிலும் நடத்தப்பட்டன. மண்டல அளவில் ஒவ்வொரு மண்டலத்திலும் ஓட்டப் பந்தயம், பூப்பந்து, ஷாட்புட், கிரிக்கெட், சதுரங்கம் போன்ற விளையாட்டுப் போட்டிகளும், ஓவியம், நடனம், கோலம், கட்டுரை, கவிதை போன்ற கலைப் போட்டிகளும் என 15 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவச் சேவைகள் துறையைச் சார்ந்த மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு நிலைப் பணியாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 150 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டிகள் நவம்பர் மாதம் மண்டல அளவில் மண்டல நல அலுவலர்களால் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநகராட்சி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளுக்காக ரூ.2.20 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற 85 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களைப் பாராட்டி மேயர் இன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இப்போட்டிகள் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைத்துறையில் பணிபுரிபவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும், தொடர் பணிகளால் மன அழுத்தமுற்ற பணியாளர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையிலும் அமைந்துள்ளன. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந. இராமலிங்கம், மாநகர நல அலுவலர் எம். ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர். எம்.எஸ்.ஹேமலதா, பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: