காங். தலைமையில் எதிர்கட்சிகள் போராட்டம்; வேலையில்லா திண்டாட்டம் குறைந்து வருகிறது: கேரள சட்டசபையில் கவர்னர் பேச்சு

திருவனந்தபுரம்: கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து வருவதாக சட்டசபையில் இன்று கவர்னர் பேசினார். இதற்கிடையே காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் கடந்த பல மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. அதனால் இந்தாண்டு தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையை தவிர்க்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், அரசின் முடிவில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. கவர்னர் உரைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி 15வது கேரள சட்டசபையின் 8வது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்ற கவர்னர் ஆரிப் முகம்மது கான் வந்தார். அவரை முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஷம்சீர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் பேசினார். அப்போது, ‘கேரளாவில் அடித்தட்டு மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும் மாநிலம் 17 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் லைப் மிஷன் திட்டம் தொடரும். மாநிலத்திற்கு முதலீடுகள் பெருமளவு வந்து கொண்டு இருக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம் குறைந்து வருகிறது’ என்றார். இதற்கிடையே இன்று கூட்டத்தொடர் தொடங்கியபோது காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளுடன் சபைக்கு வந்திருந்தனர். அப்போது, கேரள அரசு சங்பரிவார் அமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

இந்த கூட்டத் தொடரில் வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை கூட்டம் நடைபெறாது. பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறும். 3ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் கே.என். பாலகோபால் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 6 முதல் 8 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. மார்ச் 30ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

Related Stories: