சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்

பூந்தமல்லி: திருவேற்காட்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், இன்று சிறுதானிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று துவக்கி வைத்து பேசினார். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், திருவேற்காட்டில் வரும் 28, 29 ஆகிய 2 நாட்களில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெறுகிறது. இந்த சிறுதானிய உணவுகள் மூலம் நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், பாரம்பரிய சிறப்போடு நடக்கவுள்ள சிறுதானிய உணவு திருவிழாவில், நாளொரு சிறுதானிய சமையல் என 365 சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்படுகிறது.

இதன்மூலம் உலகின் மிகப்பெரிய இலச்சினை சிறுதானியங்களைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. இத்திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த உணவகங்கள் தங்களின் அரங்குகளை அமைக்கிறது. மேலும் சுவையான சிறுதானிய சமையல் போட்டிகள், சுவாரஸ்யமான சாப்பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் பட்டங்களும் வழங்கப்படுகிறது.  மேலும், இத்திருவிழாவில் சிறப்பு சொற்பொழிவுகள், பாட்டு மன்றம், பிரபல பின்னணி பாடகர்களுடன் உலகப்புகழ் பெற்ற சமையல்கலை வல்லுனர்கள் இணைந்து படைக்கும் சமையலும் சங்கீதமும், தோல்பாவைக் கூத்து, மெல்லிசை போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், சிறுதானிய உணவு திருவிழா குறித்த இலச்சினை வெளியீடு மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று காலை திருவேற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, சிறுதானிய உணவு திருவிழா இலச்சினையை வெளியிட்டு, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், மாவட்ட சேர்மன் உமாமகேஸ்வரி, திருவேற்காடு நகரமன்றத் தலைவர் என்இகே.மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் போஸ், அதிகாரிகள் செழியன், வெங்கடேசன், வேலவன், நகராட்சி ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: