ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் யார்? ஓபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு: இன்று மாலை சென்னையில் நடக்கிறது

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இவர்கள் தனியாக போட்டியிடுவதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, சுயேட்சை சின்னம்தான் ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

தற்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரண்டு பேரில் யார் பெரியவர்கள், யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதனால், ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகவும் செல்வாக்கு உள்ள, அதேநேரம் பொதுமக்களின் ஆதரவு பெற்ற நபரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளார். இதுபற்றி இன்று மாலை நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படுகிறது. அதனால் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: