ராணிப்பேட்டை அம்மூர் அரசு பள்ளியில் சிற்ப கலைகளில் சாதனை படைக்கும் மாணவன்

*தேசிய தலைவர், சுவாமி சிலைகளை செய்து அசத்தல்

*மாநில அளவிலான போட்டிகளில் சாதித்து வருகிறார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அம்மூர் அரசு பள்ளிையச் சேர்ந்த மாணவன் சிற்பக்கலைகளில் சாதனை படைத்து வருகிறார். இவர் சுவாமி சிைலகள், தேசிய தலைவர்கள் சிலைகளை செய்து, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனி திறமை ஒளிந்திருக்கும், அதனை வெளிக்காட்ட அவர்களுக்கு வாய்ப்பும், ஊக்குவிப்பதற்கு ஒருவரும் தேவை. இவை இரண்டும் கிடைத்தவர்கள் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவன் செந்தில்நாதன். இவரது தந்தை அலுமினிய கம்பெனி நடத்தி வருகிறார். மாணவன் செந்தில் நாதனுக்கு ஏதோ தனித்திறமை இருப்பதை கண்டறிந்துள்ளனர். மாணவனுக்கு சிறுவயது முதலே சிற்பம் செய்வதில் ஆர்வம் அதிகளவில் இருந்துள்ளது.

சிற்பங்கள் செய்வது குலத்தொழிலும் இல்லை. தானாகவே தன் திறமையினால் வியப்பூட்டும் அளவில் சிற்பங்களை செய்து அசத்தி வருகிறார். மாணவன் சிற்பங்களை செய்வதற்கு முன்பு விரதமிருந்து, அம்மன் சிலை, தில்லை நடராசர் சிலை, சிவன், அனுமன், படியளந்த பெருமாள் போன்ற பல்வேறு சுவாமிகள் சிலைகள் மற்றும் தேசிய மற்றும் தமிழக தலைவர்களின் சிலைகளை சர்வ சாதாரணமாக தத்ரூபமாக செய்துள்ளார்.

இவற்றை அம்மூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி தலைமை ஆசிரியை த.பவானி மற்றும் பள்ளி வகுப்பு ஆசிரியைகள் தேன்மொழி, மகாலட்சுமி ஆகிய 2 பேரும் மாணவன் செந்தில்நாதனுக்கு சிற்ப கலைகள் செய்வதில் ஊக்கமளித்து, மாணவனை மெருகேற்றி வருகின்றனர். மேலும் மாணவன் செந்தில்நாதன் சிற்ப கலையில் பள்ளியளவில் முதலிடம் பெற்று மேலும் மாவட்ட அளவில் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிற்ப கலை போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவில் நடந்த சிற்ப கலை போட்டியில் கலந்துகொண்டு சான்றிதழையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.

சிற்பக்கலைகளில் சாதிக்கும் மாணவன் மாவட்ட அளவிலும், பள்ளியளவிலும் அனைவரின் பாராட்டுதல்களையும், நன்மதிப்பையும் பெற்று திகழ்கிறார்.  அம்மூர் மேல்நிலைப்பள்ளி மாணவனின் இந்த சிற்பக்கலை, வியப்பும் விந்தையும் ஏற்படுத்துகிறது. மாணவன் செந்தில்நாதன் சிற்ப கலைகளில் மட்டுமல்லாது, படிப்பிலும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். பள்ளியில் பாடங்கள் பயின்று நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்.

வழிகாட்டிகளாக உள்ள ஆசிரியர்களுக்கு நன்றி

மாணவன் செந்தில்நாதன் கூறுகையில், ‘10 நிமிடம் கொடுத்தால் எந்த தலைவர் சிற்பங்களை செய்ய சொன்னாலும் செய்துவிடுவேன். நமது ஊர் அருகாமையில் உள்ள வேலம் மு.வரதராசனார் சிலையையும் செய்வேன். எனக்கு வழிகாட்டிகளாக உள்ள தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர்களுக்கும் நன்றி. எங்கு கலைச் சிற்ப போட்டிகள் நடந்தாலும் எனது தந்தை ராமமூர்த்தி என்னை அழைத்துச்சென்று எனக்கு ஊக்கமளிப்பார். பள்ளி நிர்வாகமும் என்னை அனைத்துப்போட்டிகளிலும் கலந்துகொள்ள வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது’ என்றார்.

சிற்பக்கலையோடு கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்

பள்ளியின் தலைமை ஆசிரியர் பவானி கூறுகையில், ‘பல சிற்பங்களை சாதாரணமாக செய்து, அசத்தி வருகிறார் மாணவன் செந்தில்நாதன், இவர் அம்மன், சிலை, தலைவர்கள் சிலைகளை தத்ரூபமாக செய்வார். அவரது திறனை பார்த்து அவருக்கு பல்வேறு ஊக்கமளித்து போட்டிகளில் பங்கேற்க வழிவகை செய்து வருகிறோம். இவர் சிற்பக்கலை மட்டுமின்றி, கல்வியிலும் சிறந்து விளங்குகிறார். அவர் மேலும் பல சாதனைகளை புரிவார்’ என்று பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: