* 3வது நாளாக நடைபெற்றது
* சந்தேக நபர்கள் விரட்டியடிப்பு
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் ரவுடிகள் நடமாட்டம், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக கிடைத்த புகாரின் பேரில், போலீசார் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு விடிய விடிய நடந்த சோதனையில் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த மர்ம நபர்களை விரட்டியடித்தனர்.சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய்கறி, பூ மற்றும் பழங்களுக்கென தனித்தனியாக அங்காடிகளுடன் ஆசியாவிலேயே பெரிய அங்காடியாக திகழ்கிறது.
தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான லாரிகளில் பொருட்கள் இங்கு விற்பனைக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் வியாபாரிகள், பொதுமக்கள் இங்கு வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்நிலையில், இந்த மார்க்கெட் வளாகத்தில் இரவு நேரங்களில் வழிப்பறி மற்றும் ரவுடிகள் அட்டகாசம், செயின் பறிப்பு, பைக் திருட்டு, கஞ்சா விற்பனை, கள்ள சந்தையில் மது மற்றும் குட்கா விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக, போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், கடந்த 8ம் தேதி கோயம்பேடு ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் ஆய்வு செய்தனர். அதில், கஞ்சா, குட்கா விற்பனை செய்தவர்கள், பைக் திருடர்கள் என்று 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருந்த நபர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால், மறுநாள் எப்போதும் போல் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைந்ததாக போலீசாருக்கு மீண்டும் தகவல் கிடைத்தது. எனவே, கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டில் மீண்டும் அதிரடி சோதனை நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த 19ம் தேதி இரவு கோயம்பேடு மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மீண்டும் தீவிர ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகள், மொட்டை மாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள், கூலி தொழிலாளர்களாக இல்லாதவர்கள் தங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.தொடர்ந்து, 3வது நாளாக நேற்று முன்தினம் இரவு போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மொட்டை மாடியில் தூங்கி கொண்டு இருந்த வாலிபர், அங்கு இருந்து தப்ப முயன்றார். போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது, 5 கிராம் கஞ்சா சிக்கியது. விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (20) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கோயம்பேட்டில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.