வியாசர்பாடி பகுதியில் பொது மக்களுக்கு மிரட்டல் ரவுடி உள்பட 5 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி முல்லை நகர் முல்லை காம்ப்ளக்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஒருவர் போதையில் கத்தியை காட்டி மிரட்டி, பொதுமக்களை அச்சுறுத்துவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, அந்த நபரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், எம்.கே. நகர் முல்லை நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (32) என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த ஆண்டு எஸ்பிளனேடு காவல் நிலைய பகுதியில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வியாசர்பாடி 2வது பள்ளத் தெருவில் வீடுகளின் வெளியே வைக்கப்பட்டு இருந்த பூத்தொட்டிகளை நேற்று முன்தினம் மாலை, போதையில் அடித்து உடைத்ததுடன், தட்டிக்கேட்ட பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வியாசர்பாடி பி-கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த நரேஷ் (19), வியாசர்பாடி 2வது பள்ளத் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (22), மேகசின்புரம் பகுதியை சேர்ந்த சுகுமார் (23), மூர்த்திங்கர்  நகர் 2வது தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (20) ஆகியோரை வியாசர்பாடி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: