சென்னை: ஊத்துக்கோட்டை அருகே பெரம்பூர் கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ். இவரது மனைவி எல்லம்மாள் (55). இவர், கடந்த சில மாதங்களுக்கு வீட்டின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது பைக்கில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் வந்தார். அவர், ‘நான் உங்களுக்கு முதியோர் ஓய்வு ஊதியம் பெற்றுத் தருகிறேன். உங்களுக்கு என்ன வயது, என்று எல்லம்மாளிடம் விவரங்களை கேட்டுள்ளார்.
எல்லம்மாள், தனக்கு 55 வயதாகிறது என்றார். இதை கேட்ட அந்த பெண், முதியோர் உதவித்தொகை பெற, உங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். நான் தாசில்தாராக பொறுப்பேற்க போகிறேன். வீட்டில் இருந்து அவசர அவசரமாக வந்துவிட்டேன். அவசரமாக புகைப்படம் எடுக்க வேண்டும், உங்கள் செயினை கொடுங்கள். அதைப்போட்டு படம் எடுத்துவிட்டு திரும்பித்தருகிறேன் என கூறியுள்ளார்.
இதை கேட்ட மூதாட்டி, கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். அந்த பெண் நகையை வாங்கி தன் கழுத்தில் போட்டு தன்னை அழகுபார்தப்படி நைசாக தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து எல்லம்மாள் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதே போன்று கூனிப்பாளையம் பகுதியில் ராணி (70) என்ற மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக 2 சவரன் செயினையும், புன்னப்பாக்கம் பகுதியில் சாந்தி (60) என்பவரிடமும் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாகவும் 3 சவரன் செயினும் பறிபோனது உள்பட 3 சம்பவங்கள் குறித்து பென்னலூர்பேட்டை, புல்லரம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் வந்தன.இதுகுறித்து திருவள்ளூர் எஸ்பி சிபாஸ் கல்யான் மேற்படி பெண்னை பிடிக்க ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் குற்றபிரிவு போலீசார் செல்வராஜ், ராவ்பகதூர், லோகநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து மோசடி பெண்ணை தீவிரமாக தேடினர்.சந்தேகத்தின் பேரில் அம்பத்தூரை சேர்ந்த தீபா புஷ்பராணி (35) என்பவரை கைது செய்து ஊத்துக்கோட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். தீபா புஷ்பாராணி தன்னை தாசில்தார் என கூறிக்கொண்டு, 3 மூதாட்டிகளிடம் இருந்தும் முதியோர் ஓய்வு உதவித்தொகை பெற்றுத்தருவதக கூறி மோசடி செய்த பெண் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 8 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், தீபா புஷ்பா ராணியை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.