கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு திருச்செங்கோடு கோயிலில் ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு: சடலம் கிடந்த தண்டவாளத்தையும் பார்வையிட்டனர்

திருச்செங்கோடு: ஓமலூர் இன்ஜினியர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக, திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலில், ஐகோர்ட் நீதிபதிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ், வேறு சமூகத்து பெண்ணான சுவாதியை காதலித்ததையடுத்து ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் 5 பேரை விடுதலை செய்தது.

இதற்கிடையில், நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளனர். 5 பேர் விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜின் உறவினர்களும், சிபிசிஐடி போலீசாரும் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த சுவாதி, பிறழ்சாட்சியாக மாறினார். இதனால் நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்  கோயிலில் 8 சிசிடிவி கேமராக்கள் உள்ளதாகவும், அதில் 2 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை மட்டுமே காவல்துறையினர் ஆய்வு செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோகுல்ராஜ் கடைசியாக இருந்த இடங்களில் உள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்ய, நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேசன், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர், விமானத்தில் நேற்று கோவைக்கு வந்தனர்.  

அங்கிருந்து காரில் திருச்செங்கோடு கோயிலுக்கு சென்றனர். அப்போது விசாரணை அதிகாரியான எஸ்பி ஸ்டாலின், கோகுல்ராஜ், சுவாதி கோயிலுக்கு வந்த விவரத்தை விளக்கினார்.

ராஜகோபுரம் உள்ளிட்ட கோயிலுக்குள் நுழையும் 4 வழிகளையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட நாளன்று, கோகுல்ராஜ் கோயிலுக்குள் வருவது, தரிசனம் செய்வது யுவராஜூடன் இருப்பது போன்ற வீடியோ பதிவுகளையும்  பார்வையிட்டனர்.

மதியம் 1 மணி வரை, சுமார் 3மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது. அப்போது கோகுல்ராஜின் தாயார் சித்ரா, யுவராஜின் மனைவி சுவீதா மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் உடனிருந்தனர். இதேபோல், கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்த பள்ளிபாளையத்தை அடுத்த  கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாள பகுதியையும் நீதிபதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: