மோடிக்கு நெருக்கமானவர்களை சந்திக்க ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்: பெரும்பான்மை சமூகம் அல்லது விஐபியை நிறுத்த நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு ஓபிஎஸ் இன்று காலை திடீரென குஜராத் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் முக்கிய தலைவர்கள் மற்றும் மோடிக்கு நெருங்கிய தொழில் அதிபர்களை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கேட்க உள்ளார். தொடர்ந்து அவர் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். விஐபி அல்லது ெமஜாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் களமிறக்கப்படுகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக்கு அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.ேக.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை களம் இறக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடைத்தேர்தலில் தனித்தனியாக களம் இறங்க முடிவு செய்துள்ளனர். ஓபிஎஸ், எங்கள் அணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். அதுவும் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் எங்கள் அணி வேட்பாளர் போட்டியிடுவார் என்று நேற்று அதிரடியாக அறிவித்தார். அறிவித்த மறுநிமிடமே ஓ.பன்னீர் செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கேட்டார்.

ஓபிஎஸ்ஸின் அதிரடியை தொடர்ந்து எடப்பாடி அணியினர் நேற்று மாலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையை சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் சந்தித்து சென்ற அடுத்த நிமிடமே ஓபிஎஸ், பாஜ தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். அப்போது ஓபிஎஸ், இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் பாஜ இடைத்தேர்தலில் போட்டியிட்டால் நாங்கள் ஆதரிக்க தயார். இல்லாவிட்டால் உங்களுடைய ஆதரவை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்தடுத்து சில நொடிகளில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் பாஜ தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.

இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் ஆதரவு கோரியதால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் பாஜ திணறி வருகிறது. முதலில் ஓபிஎஸ் வேட்பாளரை களம் இறக்காவிட்டால் எடப்பாடி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று பாஜ நினைத்து இருந்தது. இந்த நேரத்தில் 2 பேரும் ஆதரவு கேட்டதால் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை முடிவு செய்ய முடியாமல் பாஜ திணறி வருகிறது. தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓபிஎஸ் இன்று காலை திடீரென குஜராத் புறப்பட்டு சென்றார். அங்கு குஜராத் தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் குஜராத் முதல்வரும் பங்கேற்க உள்ளார். விழாவை முடித்து விட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஆதரவு கோரி பாஜ தலைவர்கள் மற்றும் மோடிக்கு நெருக்கமான அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்களை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பிற்கான  ஏற்பாட்டினை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் ஒருவர் ஏற்பாடு செய்துள்ளார். இந்த விழாவில் குஜராத் முதல்வர் கலந்து கொண்ட போதிலும் எடப்பாடி அணி தரப்பில் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு ஓபிஎஸ் குஜராத் சென்றுள்ளார்.

இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்ட பின்னர் நாளை மதியம் 2 மணிக்கு  ஓபிஎஸ் சென்னை திரும்புகிறார். நாளை மாலை ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் வேட்பாளர் தொடர்பாக முக்கிய அறிவிப்பை ெவளியிட திட்டமிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை 15 சதவீதம் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களும், 10 சதவீதம் கவுண்டர்கள், 15 சதவீதம் பட்டியலின அருந்ததியினர் சமூகத்தை சேர்தவர்களும், சிறுபான்மையினர் 30 சதவீதம், நாயக்கர், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேரும், மெஜாரிட்டியாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். 10 சதவீதம் பேர் மட்டும் எடப்பாடி சமூத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதனால், இந்த 10 சதவீதத்தையும், இரட்ைட இலை சின்னத்தையும், பணத்தை நம்பி தான் எடப்பாடி தேர்தலில் நிற்கிறார். இதனால், கவுண்டர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் 15 சதவீதம் உள்ள முதலியார் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். முதலியார் சங்க பொறுப்பாளர் ஓபிஎஸ் அணியில் உள்ளார். அவரை நிறுத்த ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இன்னொரு தரப்பினர் ஒரு விஐபியை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். விஐபியை நிறுத்தினால் பலத்தை காட்டலாம் என்று நினைக்கின்றனர்.

அதே நேரத்தில் எடப்பாடியை விட அதிக ஓட்டுக்களை வாங்கலாம் என்று முயற்சி செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். எடப்பாடி இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடிக்க எடப்பாடி தனது பலத்தை காட்டி வருகிறார். இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

Related Stories: