ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் போட்டி?..முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்சின் 2வது மகன், அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவெராவின் சகோதரரான சஞ்சய் சம்பத்தை களமிறக்க, காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவெரா (47). இவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் மகனின் முதல் மகன். இந்நிலையில், திருமகன் ஈவெரா திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு அரசியல் களத்தில் அனலை அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.  இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்யும் பணிகளை தமிழக காங்கிரஸ் மேலிடம் தொடங்கி உள்ளது. எனவே, ஈவிகேஎஸ்.இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் எளிதாக வெல்லும் என்பதும் எதிர்பார்ப்பு.

இத்தொகுதியில் ஈவிகேஎஸ்.இளங்கோவனை நிறுத்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை.  ஆனாலும், மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள ஈவிகேஎஸ்.இளங்கோவன் தான் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறி விட்டனர். ஈவிகேஎஸ்.இளங்கோவன் மனதளவில் இன்னும் பாதிப்பில் இருந்து மீண்டு வராததால் போட்டியிடும் மனநிலையில் அவர் இல்லை. எனவே, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் போட்டியிட்டால் எளிதில் வெற்றிபெறலாம் என்பதால் அவரது 2வது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக களமிறக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.  

இதுதொடர்பாக இளங்கோவனிடம் காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே, ஈவிகேஎஸ்.இளங்கோவன் குடும்பத்தினரே வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏவான திருமகன் ஈவெராவின் சகோதரரான சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைமை விரைவில் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

* ‘இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன்’

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: என்னை பொறுத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இளைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் கட்சியிலும் அதை தெரிவித்துவிட்டேன்.

எனது குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக நிற்க வைக்க வேண்டும் என்று சொன்னால், எனது இளைய மகன் சஞ்சய்க்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மற்ற தலைவர்களிடமும், அதேபோன்று அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடமும் கோரிக்கை வைத்திருக்கிறேன். இருந்தாலும் இன்னும் சில பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மேலிடம் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன்.

Related Stories: