தமிழ்நாட்டில் முதல்முறையாக ரூ.6.30 கோடியில் ஆமைகள் காப்பகம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆமைகள் காப்பகம் மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க ரூ.6.30 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டு கடற்கரையில் 5 கடல் ஆமை இனங்கள் வாழ்கின்றன. இதில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் பெரும்பாலும் தமிழக கடற்பரப்பில் முட்டையிடுகின்றன. ஆலிவ் ரிட்லி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து ஆமை இனங்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு அர்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ரூ.6.30 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்தது. இந்த நிலையில், ஆமை இனங்களை பாதுகாக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் ஆமைகள் காப்பகம் மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க ரூ.6.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் ஆலிவ் ரிட்லி, கிரீன், லெதர்பேக், ஹாவ்க்ஸ்பில், லோக்கர் ஹெட் உள்ளிட்ட கடல் ஆமை இனங்களை பெருக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், தமிழக கடலோர பகுதிகளில் கடல் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து, குஞ்சு பொரித்து கடலில் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஆமைகள் கூடு கட்டும் இடங்கள் கண்காணிக்கப்பட உள்ளன. மேலும், கடல் ஆமைகளை மோசமாக பாதிக்கக்கூடிய கடல் குப்பைகள் அகற்றுதல் மற்றும் அதன் இனப்பெருக்கத்தை அதிகரிப்பது உட்பட பல கட்டமைப்புகளை வலுப்படுத்த திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: