ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் குற்றப்பத்திரிகை வெளியீடு: பாஜ பெயருக்கு புதிய விளக்கம்

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வெளியிட்ட காங்கிரஸ், பாஜ கட்சிக்கு பிரஷ்த் ஜும்லா கட்சி (ஊழல் மலிந்த பொய் வாக்குறுதி கட்சி) என புதிய விளக்கம் தந்துள்ளது. பாஜ தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள தலைமையகத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் குற்றப்பத்திரிகையை வெளியிட்டனர்.

அதில், பாஜ கட்சியின் பெயருக்கு ‘ஊழல் மலிந்த பொய் வாக்குறுதி கட்சி’ என புதிய விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும், ‘சிலரது நலன், சுயநல வளர்ச்சி, அனைவருக்கும் துரோகம்’ என்பதே பாஜவின் தாரக மந்திரம் என 3 பிரிவாக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் கடனை பாஜ அரசு தள்ளுபடி செய்வதாகவும், பாஜ கட்சி பிரசாரத்திற்காக கோடிக்கணக்கில் செலவழிப்பதாகவும்,வேலைவாய்ப்பின்மை, உணவுப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் அவல நிலைபோன்ற பிரச்னைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன

* ராகுல் யாத்திரை 29ம் தேதி நிறைவு

கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 29ம் தேதி காஷ்மீரில் முடிவடைவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். 27, 28, 29ம் தேதிகளில் காஷ்மீரில் நடைபயணம் செல்லும் ராகுல், வரும் 30ம் தேதி லால் சவுக்கில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஸ்ரீநகர் ஸ்டேடியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

Related Stories: