மாதவரம் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு உத்தரவு

சென்னை: கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையிலிருந்து வடக்கு நோக்கி (ஆந்திரா, நெல்லூர், திருப்பதி மற்றும் காளாஸ்திரிக்கு செல்லும் பேருந்துகளுக்கான புறநகர் பேருந்து நிலையம் மாதவரத்தில் ரூ.94.16 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நவீனப்படுத்துவது குறித்து, அமைச்சர்  பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, இந்த பேருந்து நிலையத்தை சிறப்பாக பராமரிக்க பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தையும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சருடன் கலந்தாலோசிப்பது. கோயம்பேட்டிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் தனியார் பேருந்துகளை இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்வது. ஆந்திர போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுப்பது. ஆடவர் மற்றும் பெண்கள் பயணியர் தங்கும் கூடங்களை 2, 4 மற்றும் 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றியமைப்பது. பயணிகளின் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அமைப்பது.

முதல் மாடியில் உள்ள பேருந்துகள் காத்திருக்கும் பகுதியில் பேருந்துகள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்வது. மாநகர பேருந்து நிறுத்த இடத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி. பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்கு எல்இடி அறிவிப்பு பலகை அமைப்பது. பேருந்து நிலைய வளாகத்தின் மாநகர பேருந்து நுழைவாயிலில் நுழைவளைவு அமைப்பது. பேருந்து நிலையத்தின் தென்புறமுள்ள நுழைவாயிலில் போக்குவரத்தின் காரணமாக விபத்து நிகழாமல் இருக்க காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது.

கட்டிட பணிகளை மேம்படுத்தி, தோட்டத்தை பராமரிப்பது குறித்தும், பேருந்து நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் சிஎம்டிஏவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் லட்சுமி, மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாநகராட்சி அதிகாரிகள், பகுதி செயலாளர்கள் துக்கராமன், புழல் நாராயணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: