சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தலில் எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு கேட்டுள்ளேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனிடையே ஈவிகேஎஸ்.இளங்கோவன் அல்லது அவரது இளைய மகனான சஞ்சய் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இளைஞர் ஒருவருக்கு தான் காங். தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும். எனது இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன். வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் உள்ளனர். கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஏற்பேன். ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும். அதிமுக சேர்ந்து வந்தாலும் சரி, பிரிந்து வந்தாலும் சரி நாங்கள் வெற்றி அடைவோம். திமுக ஆட்சியின் 20 மாதகால சாதனைகளால் மகத்தான வெற்றி கிடைக்கும்.
வேட்பாளரை அறிவிக்கும் முன்பாகவே கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் முதல்வர் உழைத்து வருகிறார். திமுகவினர் களப்பணியை தொடங்கியதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.