சூடுபிடிக்கும் தேர்தல் களம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியது திமுக கூட்டணி..!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், பெரியார் நகரில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என் நேரு வீடு வீடாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடுகிறது. ஓரிரு நாளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்துகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிட உள்ளோம் என கூறினார். அகில இந்திய தலைமை கேட்டுக்கொண்டதை அடுத்து பாஜவும் போட்டியிடவில்லை. தேர்தல் குறித்து வரும் 23ம் தேதி நடைபெற உள்ள தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே, அமமுக இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 27ம் தேதி அறிவிக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியிருக்கிறார். நாம்  தமிழர் கட்சி தேர்தலில் களமிறங்கும் என அந்தக்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கூறியிருக்கிறார்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் பலமுனை போட்டி ஈரோடு  கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிலவுவது உறுதியாக இருக்கிறது. மேலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால் இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் தங்கள் முடிவுகளை அறிவிக்க உள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிக்கனியைப் பறித்து தரும் வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திமுக தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் பெரியார் நகரில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என் நேரு வீடு வீடாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். தொடர்ந்து திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் இந்த வாக்கு சேகரிக்கும் பணியில் விரைவில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: