திருச்சி ராமஜெயம் படுகொலை வழக்கு பிரபல ரவுடிகள் 12 பேரிடம் 3 நாள் உண்மை கண்டறியும் சோதனை: இறுதி அறிக்கை தயாரிப்பில் தடயவியல் துறை தீவிரம்

சென்னை: திருச்சி  தொழிலதிபர் ராமஜெயம் 2012 மார்ச் 29ம் தேதி நடைபயிற்சி சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் கடந்தாலும், குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து இந்த கொலை வழக்கை நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அதிகாரி எஸ்பி ெஜயக்குமார் தலைமையிலான குழுவினர் இறுதியாக 12 ரவுடிகள் மீது சந்தேகத்தின்படி உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன்படி நீதிமன்றம் 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு உத்தரவிட்டது.

தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு தடயவியல் துறை தலைமை அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி முதல் 12 ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடந்தது. டெல்லியில இருந்து வந்த மத்திய தடயவியல் துறை நிபுணர் மோசஸ் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2 நாள் சோதனையில், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்யா மற்றும் செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் 8 ரவுடிகளிடம் தனித்தனியாக உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. வழக்கம்போல் சோதனையில் ரவுடிகள் அளிக்கும் பதிலை தடயவில் துறை நிபுணர்கள் மற்றும் சிபிசிஐடி போலீசார் வீடியோ காட்சிகளுடன் பதிவு செய்தனர்.

3வது நாளான நேற்று ரவுடிகளான சாமி ரவி, மாரிமுத்து, ஆர்டிஓ சிவா உள்ளிட்ட 4 பேரிடம் காலை 10 மணி முதல் மாலை வரை சோதனை நடந்தது. இந்நிலையில், ரவுடி ராஜ்குமாரிடம் நாளை மீண்டும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த சோதனை முடிவில் 12 ரவுடிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதிலை மத்திய தடயவில் துறை நிபுணர்கள் ஓரிரு நாளில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் அறிக்கையாக அளிப்பார்கள் என்று தெரிகிறது. அந்த அறிக்கையை தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திருச்சி ராமஜெயம் கொலை குற்றவாளிகள் யார் என்று தெரியவரும் என சிபிசிஐடி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: