சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி பேருந்துகள் கொள்முதல் செய்யும் போது மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளையே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கொள்முதல் செய்யப்படும் 100% பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனர் தாக்கல் செய்த கூடுதல் பதில்மனுவில், 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டுமானால் அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த வேண்டும். ஒரு தாழ்தள பேருந்தின் விலை ரூ.80 லட்சம். அதனை 1 கி.மீ. தூரத்துக்கு இயக்க ரூ.41 செலவாகும்.
சாதாரண பேருந்துகளுக்கு இதில் பாதி செலவே ஆகிறது. இந்த காரணங்களால் 100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேறு மாற்று வழி குறித்து ஆலோசித்து தெரிவிக்கும்படி அரசு தரப்பிற்கு உத்தரவிட்டனர்.