குடியரசு தின விழா ஏற்பாடு தீவிரம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றுகிறார்: வீரதீர செயலுக்கு அண்ணா பதக்கம் முதல்வர் வழங்குகிறார்

சென்னை: குடியரசு தின விழா வருகிற 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றுகிறார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிக்கிறார். இதற்காக, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், மெரினா கடற்கரை அருகே உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

26ம் தேதி (வியாழன்) காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைப்பார். அப்போது நாட்டுப்பண் இசைக்கப்படும். அதேநேரம் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

பின்னர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் பெற்றவர்கள் அனைவரும் ஆளுநர், முதல்வருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். சுமார் 30 நிமிடம் நேரம் நடைபெறும் நிகழ்ச்சி முடிந்ததும் ஆளுநர், முதல்வர் ஆகியோர் அங்கிருந்து விடைபெற்று செல்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள், மாணவர்கள் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் பார்க்கவும் தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. குடியரசு தின விழாவில் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பார்கள்.

Related Stories: