கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு: மாணவி பயன்படுத்திய செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு..!

விழுப்புரம்: கனியாமூர் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் தாயார் ஒப்படைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பள்ளிக்கு எதிராக கலவரம் நடைபெற்று, சூறையாடப்பட்டதால் பள்ளி மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசரணையின் போது, மாணவி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை சரியில்லை என்றும் அவரது தாய் தொடர்ந்து குற்றச் சாட்டுக்களை வைத்து வந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று காலை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜரானார். அப்போது செல்வி தனது மகள் ஸ்ரீமதியின் செல்போனை நீதிபதியிடம் ஒப்படைத்தார். ஆனால் நீதிபதி புஷ்பராணி இந்த வழக்கினை சி.பி.சி.ஐ. டி.போலீசார் விசாரித்து வருகிறார்கள். எனவே அங்கு ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் மாணவியின் தாயார் செல்வி ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சிபிசிஐடி தொடர்ந்து சம்மன் அனுப்புவதால் மன உளைச்சலில் உள்ளேன். ஸ்ரீமதி உயிரிழந்து 194 நாட்களாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தனது மகள் உயிரிழப்புக்கும், செல்போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறினார்.

Related Stories: