ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு விட்டு தருகிறதா? தமாகா போட்டியிடும் என உறுதியாக அறிவிக்க ஜி.கே.வாசன் தயக்கம்: இடைத்தேர்தலில் கூட்டணி வெற்றியே முக்கியம் என பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமாகா மீண்டும் போட்டியிடும் என்று திட்டவட்டமாக அறிவிக்க ஜி.கே.வாசன் தயக்கம் காட்டியதால், இத்தொகுதியை அதிமுகவுக்கு விட்டு தருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில் கூட்டணி வெற்றியே முக்கியம் என்று ஜி.கே.வாசன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில், அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமாகா சார்பில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில செயலாளர்கள் ஜவஹர்பாபு, ராஜம் எம்.பி.நாதன், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், சி.பிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

 பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் தமாகா ஒத்த கருத்தோடு செயல்பட்டு கொணடிருக்கிறது. தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது இடைத் தேர்தல் என்பது மிக முக்கியம். தற்போதுள்ள அரசியல் சூழலில், இடைத்தேர்தல் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டிய கடமை, கூட்டணி கட்சி தலைவர்களிடம் உள்ளது. அதற்கான வியூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் தமாகா அலுவலகத்துக்கு வருகை புரிந்து வெற்றி வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை நான் நேரடியாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன். அப்போது தேர்தல் தேதி அறிவிப்பு இல்லை என்றாலும் தேர்தல் குறித்து அவரோடு கலந்து பேசினேன். தமிழக அரசியல் சூழல் குறித்து பேசினேன்.

 

நேற்று தேர்தல் அறிவிப்பு வந்த உடன் அவருடன் தொலைபேசியில் பேசினேன். இன்றைக்கு அதிமுக மூத்த தலைவர்களுடன் கலந்து பேசியிருக்கிறோம். எங்கள் இலக்கு  கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பது தான். அதிமுக, தமாகா, பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க கூடாது. எங்கள் கூட்டணிக்கு சாதகமாக தேர்தல் அமையும். இதை வைத்து ஒத்த கருத்தோடு ஓரிரு நாளில் எங்கள் கூட்டணி கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம். இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.

 கடந்த முறை நாங்கள் தான் போட்டியிட்டோம். இன்றைய அரசியல் சூழலை பொறுத்தவரை, மொத்தத்தில் கூட்டணிக்கு லாபம் ஏற்பட வேண்டும். இந்த தேர்தலின் வெற்றி வருங்கால தேர்தலுக்கு வழி வகுக்க வேண்டும். இதன் அடிப்படையில் வியூகங்கள் அமைத்து வெற்றிக்கான வழியை ஏற்படுத்துவோம்.

 

கூட்டணி கட்சிகளின் ஒரே நோக்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு அணுக வேண்டும். அதை உறுதிபடுத்த கூட்டணி தலைவர்கள் பேசி நல்ல முடிவை எடுப்போம். தமாகா கூட்டணியின் முக்கியமான கட்சி. எனவே, கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று கூடி பேசி ஒத்த கருத்தோடு உரிய முடிவை எடுப்போம். அதன் பிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: