மாம்பலம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில ஆசாமி பிடிபட்டார்: 8 கிலோ கஞ்சா பறிமுதல்; மற்றொருவருக்கு வலை

சென்னை: சென்னை பெருநகரில் போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தனிப்படையினர் நேற்று காலை, மாம்பலம் வி.என்.ரோட்டில் உள்ள பள்ளி அருகே கண்காணித்தபோது அங்கு ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வைத்து போதை தரும் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது.

அங்கு கஞ்சா சாக்லேட்டுகளை விற்ற சுரேந்திரன் யாதவ் (43) என்பவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், பீகார் மாநிலம், சக்ரி, மதுபானி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைது செய்யப்பட்ட சுரேந்திரன் யாதவ் ராயப்பேட்டை பகுதியில் பீடா கடை நடத்தி வரும் தனது மாமா அமுல்குமார் யாதவ் என்பவருடன் சேர்ந்து பீகார் மாநிலத்தில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வரவழைத்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமுல்குமார் யாதவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட சுரேந்திரன் யாதவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: