ஸ்ரீவீரராகவர் பெருமாள் கோயிலில் இன்று கருட சேவை கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை மற்றும் சித்திரை என ஆண்டுக்கு  இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதன்படி தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவ பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது. பிரம்மோற்சவம் விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாளான இன்று காலை உற்சவர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஐந்து மணிக்கு கோபுர தரிசனமும் 7 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 5வது நாள் 21ம் தேதி சனிக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான  23ம் தேதி திங்கள்கிழமை காலை திருத்தேர் திருவிழாவும் 10வது நாளான 26ம் தேதி வெட்டிவேர் சப்பரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுக்கின்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Related Stories: