காதலியை சந்திக்க பர்தா அணிந்து பெண்கள் கல்லூரிக்கு சென்ற வாலிபர்: குமரியில் பரபரப்பு

நாகர்கோவில்: திருவனந்தபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலப்புரத்தில் மருத்துவம் சார்ந்த படிப்பு படித்து வருகிறார். அவரது உறவினரின் மகள் ஒருவர் கன்னியாகுமரமி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவியை சந்திப்பதற்காக நேற்று மதியம் குலசேகரத்துக்கு வந்த வாலிபர், பர்தா அணிந்து கொண்டு பெண் போல் கல்லூரிக்குள் நுழைந்துள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டுபிடித்துவிட்டதால் குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் மாணவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது மாணவர் கூறியதாவது: உறவினர்களான நானும், மாணவியும் நீண்ட காலமாக காதலிக்கிறோம். ஆனால் இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவியை நேரில் சந்திக்க முடியவில்லை. இதனால் தினமும் நாங்கள் 2 பேரும்  செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்தோம். இந்த நிலையில் மாணவியை நேரில் சந்தித்து மனம்விட்டு பேச தீர்மானித்தேன்.

ஆனால் மாணவி படிக்கும் கல்லூரிக்குள் வெளிநபர்கள், குறிப்பாக ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

எனவே பர்தா அணிந்து கொண்டு பெண் போல் சென்றால் மாணவியை எளிதாக பார்த்துவிடலாம் என்று திட்டமிட்டேன். இதற்காக ேநற்று மதியம் பைக்கில் குலசேகரம் வந்தேன். பின்னர் தயாராக கொண்டு வந்த பர்தாவை அணிந்துகொண்டு கல்லூரிக்குள் நுழைந்தேன். ஆனால் மாணவியை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே கல்லூரியில் பல இடங்களிலும் பதுங்கி நின்றவாறு மாணவியை தேடி அலைந்தேன்.

என் நடை, உடை, பாவனையில் சந்தேகமடைந்த காவலாளிகள் என்னை கண்டுபிடித்துவிட்டனர். நான் செய்தது தவறுதான் என்று கூறியுள்ளார்.  இதையடுத்து மாணவரின் பெற்றோரை போலீசார் தொடர்புகொண்டு காவல் நிலையத்துக்கு அழைத்தனர். பின்னர் மாணவரின் எதிர்காலம் கருதி, இனி இதுபோல் செய்யக்கூடாது என போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இரவு சுமார் 10 மணியளவில் மாணவர் விடுவிக்கப்பட்டார்.

Related Stories: