ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமானநிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி: கலெக்டர் தகவல்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ சார்பாக விமான நிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி  வழங்கப்பட உள்ளது  என சென்னை கலெக்டர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாட்கோ, நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச்  சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி ஏவியேஷன் அகெடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடையை நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்க உள்ளது.

இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும், கல்வித் தகுதியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும்  விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதம் ஆகும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000ஐ தாட்கோ வழங்கும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் விண்வெளி மற்றும் விமான போக்குவரத்து திறன் துறை கவுன்சிலால் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.  

இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான இண்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா, ஏர் இந்தியா போன்ற புகழ் வாய்ந்த நிறுவனங்களில் பணி புரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில்  உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும். அல்லது 044-25246344, 9445029456 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: