செம்பட்டி அருகே பட்டாசு விபத்தில் இந்து முன்னணி நிர்வாகி, மனைவி பரிதாப பலி: 3 குழந்தைகள் படுகாயம்

சின்னாளபட்டி: செம்பட்டி அருகே நடந்த பட்டாசு வெடி விபத்தில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வீரக்கல் ஊராட்சியை சேர்ந்தவர் ஜெயராமன் (48). திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர்.

இவரது மனைவி நாகராணி (32). இவர்களது குழந்தைகள் தீப்திகா (7), கனிஷ்கா (5), போகன் (4). செம்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டி கண்மாய் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தை ஜெயராமன் வாடகைக்கு எடுத்துள்ளார். இங்கு கீழ்த்தளத்தில் 5 கடைகள் உள்ளன. 5 கடைகளிலும் மத்தாப்புகள் மற்றும் வாணவேடிக்கை பட்டாசுகளை விற்பனைக்காக வைத்திருந்தார். கட்டிடத்தின் மேல்தளத்தில் தனது குடும்பத்துடன் ஜெயராமன் வசித்து வந்தார்.

நேற்று மாலை ஜெயராமனின் குழந்தைகள் வணிக வளாகம் முன்புள்ள காலி இடத்தில் விளையாடி கொண்டிருந்தனர். மேல்தளத்தில் உள்ள வீட்டில் ஜெயராமன், நாகராணி இருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் சரமாரியாக வெடிக்க தொடங்கின. இதில் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. கட்டிடத்தை சுற்றி நிறுத்தப்பட்டிருந்த 5 கார்கள் சேதமடைந்தன. கட்டிடத்தின் கீழே விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகளுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி முருகேசன், காவல் ஆய்வாளர்கள் வெள்ளையப்பன், செந்தில்குமார், ஆத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து கட்டிடத்திலிருந்த பட்டாசுகள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். பின் பொக்லைன்கள் உதவியுடன் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் இறந்த நிலையில் கிடந்த ஜெயராமன், நாகராணி ஆகியோரது உடல்களை மீட்டனர். அவர்களது உடல்களை கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு இரவு 11 மணியளவில் வந்த அமைச்சர் பெரியசாமி, காவல்துறை அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பட்டாசு வெடி விபத்தில் தம்பதி பலியான சம்பவம், அப்பகுதிமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: