காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம் சுற்றுலா தலங்களில் குவிந்த ‘டெல்டா’ மக்கள்

நாகப்பட்டினம் : காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் சுற்றுலா தளங்களில் மக்கள் குவிந்தனர்.தமிழகம் முழுவதும் நேற்று காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி டெல்டா மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடும்பத்தோடு சுற்றுலா தலங்கள் அல்லது வழிபாட்டு தலங்கள் சென்று வருவார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி கடற்கரை, நாகப்பட்டினம் கடற்கரை, நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு குவிந்தனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடலில் இறங்கி நீராடினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக கல்லணையில் குவிந்தனர். கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா, மணிமண்டபம் ஆகியவைகளை சுற்றி பார்த்துவிட்டு தங்களது வீடுகளிலிருந்து கொண்டு வந்த உணவுகளை உணவருந்தினர். பெரிய ராட்டினம் , படகு ராட்டினம் மற்றும் வாட்டர் பலூன், படகு சவாரி, மயில் ராட்டினம், ஹெலிகாப்டர், ஏரோப்ளேன், ட்ரெயின் ஆகியவைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடினர்.

சிறுவர் பூங்காக்களில் காணும் இடமெல்லாம் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. காவிரி ஆற்று பாலம், கொள்ளிடம் பாலம் ஆகியவைகளில் நின்று காவிரியில் வழிந்து ஓடும் தண்ணீரின் அழகை கண்டு ரசித்தனர்.திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் மதகுகளிலிருந்து வெளியேறும் குறைந்த அளவு தண்ணீரில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர். தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்த உணவு மற்றும் இதர பலகாரங்களை சாப்பிட்ட பின்னர், மீண்டும் பிற்பகலிலும் பலர் குளித்து மகிழ்ந்தனர்.

முக்கொம்பு மேலணை பூங்காவிலுள்ள ராட்டினங்கள், சறுக்கு பொம்மைகள், ஊஞ்சல்கள், யானை பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். கட்டணம் செலுத்தி விளையாடும் வாட்டர் டேங்க் விளையாட்டு, ராட்த ராட்டினம் போன்ற விளையாட்டிலும் கட்டணம் செலுத்தி குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

Related Stories: