மாதவரம் மேம்பாலம் அருகே அடிப்படை வசதி இல்லாத சிஎம்டிஏ பார்க்கிங் யார்டு

திருவொற்றியூர்: மாதவரம் மேம்பாலம் அருகே சி.எம்.டி.ஏ.,க்கு சொந்தமான வாகன நிறுத்த மையம் (பார்க்கிங் யார்டு) உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் செயல்படுவதோடு, நூற்றுக்கணக்கான லாரிகள் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் இங்கு வந்து செல்கின்றன. இங்குள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் சாலை பள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்று விடுகிறது. மழைக்காலத்தில் இங்குள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கால்வாய்களில் இருந்து வெளியேறி சாலை பள்ளங்களில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், தெருவிளக்குகளும் சரிவர எரியாததால், இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வாகன நிறுத்த மையத்தில், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் சரியில்லாததால் சிரமப்படுகின்றனர்.  

தினமும் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு சரக்குகள் கையாளப்படும் இந்த வாகன நிறுத்த மையத்தில் வாகனங்களின் பாதுகாப்பிற்கும், உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சியிடம் தெரிவித்தால், சிஎம்டிஏ நிர்வாகம் தான் சரிசெய்ய வேண்டும் என்று தட்டிக் கழிக்கின்றனர். எனவே, சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி இணைந்து இங்குள்ள சாலைகளை சீரமைத்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என்று ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: