சரும நிறம் மாறும் வீட்டிலிகோ நோயால் பாதிப்பு: மம்தா அதிர்ச்சி தகவல்

சென்னை: வீட்டிலிகோ என்ற சரும நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தனது சரும நிறம் மாறிக்கொண்டே வருவதாகவும் நடிகை மம்தா மோகன் தாஸ் கூறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மயோக்கம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். அதன்பிறகு மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள இவர், 2006ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ஊமை விழிகள், கருமேகங்கள் கலைகின்றன என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மம்தா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இடையில் இருமுறை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு அதிலிருந்து மீண்டார். இந்நிலையில் இப்போது ஆட்டோ இம்யூன் எனப்படும் விட்டிலிகோ நோய் இருப்பதாகவும், இதனால் தன்னுடைய நிறம் மாற்றம் அடைந்து வருவதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விட்டிலிகோ என்பது தோலின் நிறத்தை இழக்க செய்யும் ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தோல் நிறம் இழக்க நேரிடும். கை, கால், உதடு, முடி என உடலின் எந்த பாகத்திலும் இந்த நோயினால் நிறத்தை இழக்கலாம். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை என மம்தா குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை படித்துவிட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: