பொருளாதார சிக்கல் அதிகரிப்பு அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடு: பாக். பிரதமர் சொல்கிறார்

இஸ்லாமாபாத்: அணுசக்தி நாடு கடன் கேட்டு அடுத்த நாட்டிடம் கையேந்துவது வெட்கக்கேடானது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் உள்ளது அத்தியாவசியப் பொருட்களின் விலை 25 சதவீதம் முதல் 62 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம் இப்போது முழுக்க முழுக்க கடன் வாங்கிய பணத்தில் இயங்கி வருகிறது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து பாகிஸ்தான் புதிய நிதி உதவியைப் பெற்றது.

இந்த சூழலில் பாகிஸ்தான் நிர்வாக சேவையின் தகுதிக்கான அதிகாரிகளின் தேர்ச்சி விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில்,’ அணுசக்தி நாடு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது. கடன் கேட்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டுக் கடன்களை நாடுவது சரியான தீர்வாகாது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என கூறினார்.

* வைரலாகும் மோடி பேச்சு

பாகிஸ்தானில் தற்போது பிரதமர் மோடி பேச்சு வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் கடன் கேட்பது வெட்கக்கேடானது என்று அந்த நாட்டு பிரதமர் கூறியிருந்த நிலையில் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் பிரதமர் மோடி பேசிய போது ‘பாகிஸ்தானின் ஆணவத்தை அழித்தோம், அவர்களை பிச்சைக் கிண்ணத்துடன் உலகம் முழுவதும் சுற்றி வரும்படி செய்தோம். பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்படுவதை நிறுத்திவிட்டோம்’ என்று பேசினார். இப்போது பாகிஸ்தானில் இதே நிலைதான் உள்ளது. எனவே இந்த வீடியோவை இம்ரான்கான் கட்சியினர் பரப்பி வருகிறார்கள்.

Related Stories: