அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா தாக்குதலில் பலி 40ஆக அதிகரிப்பு

கீவ்: உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்நிலையில் சனிக்கிழமையன்று உக்ரைனின் டினிப்ரோ நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்ய வீரர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்த குடியிருப்பில் சுமார் 1700 பேர் வசித்து வந்தனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலில் சுமார் 75 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகின்றது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நேற்று வரை 40ஆக உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது. இங்கு எந்த ராணுவ வசதியும் இல்லை என்று குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு ரஷ்யாவால் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது கருதப்படுகின்றது.

Related Stories: