சென்னையில் இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு; 15,000 காவலர்கள் கொண்ட பாதுகாப்பு படை

சென்னை: சென்னையில் இன்று காணும் பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாட உள்ள நிலையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் 15 ஆயிரம் காவலர்கள் கொண்ட சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இது, பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா. காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் (கன்னுப்பொங்கல்) அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர்.

இந்த பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெற்று தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். அதாவது வீட்டில் இருக்கும் வயதுக்கு மூத்தவர்கள் கால்களில் விழுந்து ஆசி பெற்று கொள்வது போன்றவை நடைபெறும். நம் வழித்தோன்றலுக்கும் நம்முடைய பண்பாட்டை தெரிவிப்பதோடு, பெரியோர்களிடம் ஆசி பெறுதல் போன்ற நல்லபழக்கம் மற்றும் கலாச்சாரத்தை தெரிவித்தல் ஆகியவை ஆகும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். மேலும் தங்கள் உற்றார், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடுவார்கள்.

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் சுற்றுலா தலங்களில் அனைத்திலும் மக்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள். எனவே சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், கடற்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் நான்கு தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்துக் கண்காணிக்கப்பட உள்ளது. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக குழந்தைகளுக்கு காவல் அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 டிரோன் கேமராக்களும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் 2 டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு சமூக விரோதிகள் மற்றும் குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்பட உள்ளது. சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் மற்றும் 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் காணும் பொங்கல் பண்டிகையையடுத்து 15 ஆயிரம் காவலர்கள் கொண்ட சிறப்பு பாதுகாப்புப் படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* கடலில் குளிக்க தடை

காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் காவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர்கள் திஷா மிட்டல், சிபி சக்கரவர்த்தி ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* பைக் ரேஸ் தடுக்க 25 தனிப்படைகள்

காணும் பொங்கலை முன்னிட்டு மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு பகுதிகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பைக் ரேஸ் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க மாநகரம் முழுவதும் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* 140 நீச்சல் வீரர்கள் தயார்

காணும் பொங்கலுக்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக்குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல், சென்னை முழுவதும் மீட்பு பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 140க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: