ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக தலைமை ஆதரவு: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம் ஆகும். இதை செயல்படுத்தும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகளை ஒன்றிய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் சமமாக பிரித்து கொள்ளலாம் என்பதால் இந்த திட்டம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான கருத்துக்களை அரசியல் கட்சிகள் 16ம் தேதி (நாளைக்குள்) தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சட்ட ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. அதிமுக தரப்பில் இருந்து இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக சார்பில் இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது சஸ்பென்ஸ். அதேநேரத்தில் சூசகமாக சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் எல்லோருக்குமே ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தால் மகிழ்ச்சிதான்’’ என்றார்.

* ஆளுநருக்கு அதிமுக பதில்

அதிமுக அண்ணா வழி வந்த இயக்கம். சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு என்று அழைக்கின்றோம். வழக்கத்தில் நாம் தமிழகம் என்று சொல்கின்றோம். எனவே, தமிழ்நாடு என்பதை என்றைக்கும் மாற்றக்கூடாது. இது அண்ணாவின் கனவு. எனவே, இது தமிழ்நாடுதான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Related Stories: