தாளவாடியில் பயிர்கள் சேதம் 2 மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத கருப்பன் யானை: மீண்டும் வனத்திற்குள் ஓடி ஒளிந்தது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் தினமும் இரவில் கருப்பன் யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. விவசாயிகள்கோரிக்கையை ஏற்று கருப்பன் யானையை பிடிக்க கபில்தேவ், முத்து, கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகளை வனத்துறையினர் அப்பகுதியில் நிறுத்தினர். மேலும் டிரோன் மூலம் கண்காணித்தனர். 2 நாட்களுக்கு முன் கருப்பன் யானை இரிபுரத்தில் ஒரு விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பசு மாட்டை தாக்கி காயப்படுத்தியது. நேற்று அதிகாலை இரிபுரம் பகுதியில் விவசாய தோட்டத்திற்கு மீண்டும் வந்த கருப்பன் யானையை வனக் குழுவினர் சுற்றி வளைத்து மயக்க ஊசி  செலுத்தினர். மயங்கி விழும் என காத்திருந்த வேளையில், திடீரென வனப்பகுதிக்குள் ஓடி தப்பியது.

இதையடுத்து, இரிபுரம் வன எல்லையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ளே சென்று கருப்பன் யானையை கண்டுபிடித்து வனக்குழுவினர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தினர். அதனை மீட்டு வர கும்கி யானை கலீமை வனப்பகுதிக்குள் அழைத்து சென்றனர். ஆனால் 2  மயக்க ஊசி செலுத்தியும், கருப்பன் யானை வலுவுடன் ஓரிடத்தில் நிற்காமல் சுற்றி திரிந்ததால் அதனை பிடிக்கும் முயற்சியை வனத்துறையினர் கைவிட்டனர். மேலும் ஒரு மயக்க ஊசி செலுத்தினால் யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் தொடர்ந்து கண்காணிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: