திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சி பாசறை, திமுக இளைஞர் அணி செயலி தொடக்கவிழா, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இளைஞரணி செயலாளர் பொறுப்பு தலைவரால் வழங்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த மூன்றரை ஆண்டுகளில் தலைவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. கடந்த ஜூன் 5ம் தேதி முதல் பயிற்சி பாசறை கூட்டம் தொடங்கிய போது சிறப்பாக நடத்தியுள்ளீர் என்று பாராட்டு தெரிவித்தார். தொடங்குவது முக்கியமல்ல அதனை சிறப்பாக கொண்டு செல்வது முக்கியம் என தலைவர் அறிவுரை வழங்கினார். தலைவர் ஒரு விசயத்தை கையில் எடுத்தால் அதனை செய்து முடிக்கும் வரை விட மாட்டார்.

அன்பகத்தில் இருந்து சிறு உத்தரவு வந்தாலும் அதனை செய்து முடிக்கும் வல்லமை பெற்றது திமுக இளைஞரணி. 280 இடங்களில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த பாசறை கூட்டம் குறித்து என்னை விட தலைவர் அதிக அக்கறையுடன் கேட்டறிவார். திமுக பொதுக்குழுவில் திராவிட மாடல் பயிற்சி பாசறை குறித்து பாராட்டப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தற்போது திராவிட மாடல் பயிற்சி பாசறை-2 நடைபெறுகிறது.

ஒன்றிய, பேரூர் அளவில் நடத்தப்படும் பயிற்சி பாசறையில் திமுக கொள்கைகள், சாதனைகள் கொண்டு செல்லப்படும். இளைஞரணி சார்பில் உருவாக்கப்படும் செயலியை இளைஞரணியினர் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தலைவர், இளைஞரணியை இரும்பு கோட்டை போல் உருவாக்கியுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் இல்லம்தோறும் இளைஞரணி மூலம் சிறப்பாக செயல்பட்டு திமுக சாதனைகள், இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். அடுத்தப்படியாக ஒன்றிய, நகர,பேரூர் பகுதிகளில் திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பாசறை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமைய வேண்டும். நாம் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன அந்த பணிகளை உற்சாகமாக செய்ய வேண்டும். திமுக தலைவர் கட்டளையிட்டால் அதனை செய்து முடிக்க இளைஞரணி தயாராக இருக்கிறது.

Related Stories: