தமிழ்நாடு கவர்னரை சிக்கலில் மாட்டி விட்டது யார்? ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் மீடியா ஆலோசகர் மீது பரபரப்பு புகார்

சென்னை: ஆளுநர் மாளிகையில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள மீடியா ஆலோசகர் தான் தமிழ்நாடு கவர்னரை சிக்கலில் மாட்டி விட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி பதவியேற்றார். ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசுடன் இணக்கமாக செயல்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, போக போக எதிர்ப்பு போக்கை கையாண்டு வருகிறார். தமிழ்நாடு அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சட்டப்பேரவையில் அரசு அச்சடித்து கொடுத்த உரையில் உள்ள வாசகங்களை படிக்காமல் புறக்கணித்தார்.

தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதில், தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றார். ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்று அச்சடிக்காமல், தமிழக ஆளுநர் என்று அச்சடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட உருவாக்கப்பட்டதுதான் ஆளுநர் பதவி. மாநில வளர்ச்சிக்கு பக்கபலமாக செயல்படுவதோடு, ஒன்றிய அரசின் உதவிகளை பெற்றுத் தருவதும் மாநில ஆளுநரின் கடமையாகும்.  மத்தியில் ஆளும்கட்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளுக்கு கருணை அடிப்படையில் ஆளுநர் பதவி வழங்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

மத்தியில் ஒரு கட்சியும், மாநிலத்தில் மற்றொரு கட்சியும் அமையும்போது ஆளுநரும் முதல்வரும் எதிரெதிர் துருவமாகின்றனர். முக்கியமாக, பாஜ ஆட்சி புரியாத பிற மாநிலங்களில்தான் முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே யார் பெரியவர் என்கிற போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதே நிலைதான் தமிழ்நாட்டிலும் நடைபெறுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் பலரும் பணியாற்றுகிறார்கள். இவர்கள்தான் தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஆளுநருக்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆளுநரும் உயர் கல்வி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, அந்த தகவல்களை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்து செய்தியாக வெளியிட ஏற்பாடு செய்வார்கள்.

இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், சென்னை ஆளுநர் மாளிகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கவர்னர் ஆர்.என்.ரவி, மீடியா ஆலோசகர் என்று (அரசு பதவி இல்லை) புதிய நபரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் நிர்ணயித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மீடியா ஆலோசகர் வந்த பிறகு, கவர்னரின் செயலாளர்கள், கன்ட்ரோலர் (இணை செயலாளர்) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட கவர்னரை நெருங்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி விட்டாராம் மீடியா ஆலோசகர்.

சமீபத்தில் கூட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என கூறாமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என்றும், தமிழ்நாடு அரசு முத்திரைக்கு பதில் ஒன்றிய அரசு முத்திரை அச்சிட்டு, முதல்வர் உள்ளிட்ட அனைத்து விஐபிக்களுக்கும் அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டது. இதுபோன்று ஒரு அழைப்பிதழ் அடித்ததுகூட கவர்னர் மாளிகையில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க மீடியா ஆலோசகரின் வேலைதான் இது என்கிறார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மாடத்தில் இருந்து வீடியோ எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியதும் இந்த மீடியா ஆலோசகர்தானாம். சட்டப்பேரவை நடக்கும்போது அரசு அனுமதி இல்லாமல் யாரும் வீடியோ எடுக்க கூடாது என்பது மரபு.

இப்படி தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநரை, இந்த மீடியா ஆலோசகர் சிக்கலில் மாட்டி விட்டுக் கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை பணியாளர்களே தெரிவித்து வருகிறார்கள். வழக்கமாக ஆளுநர் டெல்லி மற்றும் வெளியூர் செல்லும்போது அரசு உயர் அதிகாரிகள் ரயில் மூலம்தான் பயணம் செய்வார்களாம். ஆனால் மீடியா ஆலோசகர் விமானத்தில் தான் பயணம் செய்வாராம். இப்படி பல்வேறு அதிகாரதுஷ்பிரயோகம் செய்து வருவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் கூறி, புதிதாக பணியில் அமர்த்தியுள்ள மீடியா ஆலோசகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியிடம் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளார்களாம். இல்லையென்றால், தமிழ்நாடு மக்களிடம் ஆளுநருக்கு மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுவார் என்றும் கூறியுள்ளனர்.

Related Stories: