சின்னாளபட்டி அருகே வேனில் கடத்திய 1,300 கிலோ புகையிலை பறிமுதல் : 2 பேர் கைது

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகே சரக்கு வேனில் கடத்திய 1,300 கிலோ புகையிலையை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். மதுரை மண்டல காவல் துறை தலைவரின் சிறப்பு அதிரடி படை நேற்று திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது சின்னாளபட்டி பிள்ளையார்நத்தம் பிரிவு அருகே கரட்டழகன்பட்டி செல்லும் சாலையில் ஒரு சரக்கு வேன் வேகமாக சென்றது.

 இதையடுத்து அதிரடி படை போலீசார் அந்த வேனை பிடித்து சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட சுமார் 1,300 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4.90 லட்சம் ஆகும். விசாரணையில், மதுரை, திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை அனுப்பி விற்பனை செய்வதற்காக பெங்களூரில் இருந்து சரக்கு வேன் மூலம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அதிரடிப்படை போலீசார், வேனை ஓட்டி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த மதியழகன் (32), உடன் வந்த வேடபட்டியை சேர்ந்த அப்பாஸ் (28) ஆகியோரை கைது செய்தனர். 1,300 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அம்பாத்துரை போலீசில் ஒப்படைத்தனர். ேமலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: