பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ஏர்போர்ட்டில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: கூடுதல் விமானங்கள் இயக்க கோரிக்கை

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இயக்கப்படும்  விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதை பயன்படுத்தி விமான  நிறுவனங்கள் பயணிகளின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டது. சென்னை விமான  நிலையத்தில், நேற்று முன்தினம் மாலையில் இருந்தே கூட்டம் அதிகமாக உள்ளது.  வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமான சேவைகள் உள்ளன.  நேற்று இந்த 6 விமானங்களிலும் சீட் முழுமையாக நிரம்பிவிட்டது. அதனால்  சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மதுரைக்கு நேற்று 3 விமானங்கள்  இயக்கப்பட்டன. அந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் ரூ.15  ஆயிரத்திலிருந்து ரூ.19 ஆயிரம் வரை உள்ளன. இன்று (14ம் தேதி) சென்னையில்  இருந்து மதுரைக்கு செல்லும் 6 விமானங்களில் ஒரு விமானத்தில் இருக்கைகள்  நிரம்பிவிட்டது. 5 விமானங்களில் ஒரு சில சீட்கள் மட்டுமே உள்ளன. அதிலும்  கட்டணம் ரூ.12,500 வரையில் உள்ளது. சாதாரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு  ரூ.3,600ல் இருந்து ரூ.4000 வரை தான் டிக்கெட் கட்டணம் இருக்கும்.

அதேபோல  சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 3 விமானங்கள்  இயக்கப்படுகின்றன. அவைகளிலும் ஒரு சில டிக்கெட்கள் மட்டுமே உள்ளன. கட்டணம்  ரூ.14 ஆயிரத்தில் இருந்து, ரூ.15 ஆயிரம் வரையில் உள்ளது. பயணிகளின்  கூட்டத்தை சமாளிக்க, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக தூத்துக்குடிக்கு  2 விமானங்கள் நேற்று இயக்கப்பட்டன. அவற்றில் கட்டணம் ரூ.17 ஆயிரத்தில்  இருந்து, ரூ.20 ஆயிரம் வரையில் வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடிக்கு இன்று (14ம் தேதி) 3 விமானங்களிலும் டிக்கெட்கள் இல்லை. பெங்களூரூ வழியாக  தூத்துக்குடி செல்லும், ஒரு விமானத்தில் மட்டும் ஒரு சில சீட்டுகள் உள்ளன.  அதிலும் கட்டணம் ரூ.15 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில்  சென்னை-தூத்துக்குடிக்கு கட்டணம், ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5,300  வரையில் வசூலிக்கப்படும்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு தினமும் 4  விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு சில சீட்கள் மட்டுமே உள்ளன.  டிக்கெட் கட்டணம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரம் வரையில் உள்ளது.  சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக திருச்சிக்கு செல்லும் ஒரு  விமானத்தில் மட்டும் சீட்டுகள் உள்ளன. கட்டணம் ரூ.15 ஆயிரம் வரை  வசூலிக்கப்படுகிறது. இன்று (14ம் தேதி) சென்னையில் இருந்து திருச்சிக்கு  செல்லும் 4 விமானங்களில் 2 விமானங்களில் இருக்கைகள் நிரம்பி விட்டது. மற்ற 2  விமானங்களில் மட்டுமே டிக்கெட் இருக்கிறது. டிக்கெட் கட்டணம் ரூ.10  ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. பெங்களூர் வழியாக திருச்சி செல்லும் 2  விமானங்களில் டிக்கெட் உள்ளது. ஆனால் கட்டணம் ரூ.14 ஆயிரம். சாதாரண  நாட்களில் சென்னை-திருச்சி விமான கட்டணம் ரூ.3,500.

சென்னையில் இருந்து  கோவைக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

நேற்று அனைத்து  விமானங்களிலும் இருக்கைகள் மிகக் குறைந்தளவில் உள்ளன. கட்டணம் ரூ.10  ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரம் வரையில் உள்ளது.  இன்று (14ம் தேதி)  கோவைக்கு செல்லும் 6 விமானங்களில் 4 விமானங்களில் மட்டுமே சில இருக்கைகள்  உள்ளன. 2 விமானங்களில் இருக்கைகள் நிரம்பிவிட்டது. அதிலும் கட்டணம் ரூ.10  ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரம் வரையில் உள்ளது. சாதாரண நாளில் கோவைக்கு  விமான கட்டணம் ரூ.3,500. தீபாவளி,  கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காலங்களில், மதுரை, தூத்துக்குடி, கோவை,  திருவனந்தபுரம், கொச்சி, மும்பை உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கூடுதல்  விமானங்கள் இயக்கப்பட்டது. ஆனால், இம்முறை விமான நிறுவனங்கள் கூடுதல் விமான  சேவைகளை இயக்கவில்லை. அதற்கு பதிலாக, பெங்களூரு வழியாக சுற்று  வழித்தடத்தில் இயக்குகின்றனர். இதனால், பயண நேரமும் அதிகமாவதோடு, டிக்கெட்  கட்டணமும் பல மடங்கு அதிகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கூடுதல் விமானங்கள் இயக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

Related Stories: