எதிர்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் ராகுலின் நடைபயண நிறைவு விழா; சந்திரசேகர ராவின் மாநாடு: ஒரே குடையின் கீழ் பாஜகவை எதிர்க்கும் வியூகம் பயனளிக்குமா?

புதுடெல்லி: ராகுலின் நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போல், சந்திர சேகர ராவ் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டிற்கும் எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒரே குடையின் கீழ் பாஜகவை எதிர்க்கும் வியூகம் பயனளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ெடல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக பஞ்சாப் சென்றுள்ளது. இம்மாதம் 30ம் தேதி காஷ்மீரில் ராகுலின் நடைபயணம் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

குறிப்பாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதுவரை, ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி தவிர வேறு எந்த கட்சியும் நிறைவு நிகழ்வில் கலந்து கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை. உத்தர பிரதேசத்தில் நடந்த நடைபயணத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் பங்கேற்கவில்லை. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சி தலைவர்கள் ராகுலின் நடைபயணத்திற்கு ஆதரவு கொடுத்து பங்கேற்றனர்.

தற்போது காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள 21 கட்சிகளில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, சந்திரசேகர ராவின்  பாரத் ராஷ்டிர சமிதி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரும் 18ம் தேதி தெலங்கானாவின் கம்மத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்று பெயர் மாற்றிய பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட கட்சிகளின் தலைவர்கள் ராகுலின் நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ல் நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பலமான பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து எதிர்கட்சிகள் தரப்பில் குழப்பங்கள் நீடிக்கின்றன. மேலும் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களை  பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்த வேண்டும் என்று விரும்புவதாக அரசியல் ஆய்வாளர்கள்  கூறுகின்றனர். அதேநேரம் காங்கிரஸ் கட்சியானது வேறு எந்த கட்சியின் தலைவரையும்  பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் ஆர்வம் கொள்ளவில்லை என்றும், அவர்களின் பெயரை அறிவிப்பதில் இருந்து விலகியே உள்ளது. இத்தகைய சூழ்நிலையில்,  21 கட்சிகளின் தலைவர்கள், காங்கிரசுக்கு எதிரான எதிர்கட்சி தலைவர்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக செயல்படுவார்களா? என்பது கேள்வியாக உள்ளது.

Related Stories: