திருவள்ளுவர் தினத்தையொட்டி 133 அடிக்கு திருக்குறள் எழுதி விவசாயி சாதனை

திருவாடானை: திருவள்ளுவர் தினத்தையொட்டி கையெழுத்து கலையை மறக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 133 அடி நீள தாளில் திருக்குறளை கையால் எழுதி விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அறுநூற்றிமங்கலத்தை சேர்ந்த விவசாயி சின்னப்பெருமாள். இவர் தமிழ் மீது கொண்ட பற்றுதலால் வரலாற்று சின்னம், வரலாற்று தலைவர்கள், தேசிய சின்னங்கள் போன்றவற்றை கையால் எழுதியும் வரைந்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படி சுமார் 7 ஆயிரம் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு தேசிய அஞ்சல் துறை சார்பாக இவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 133 அடி நீளமுள்ள தாளில் திருக்குறளை கையால் பல வண்ணங்களில் எழுதி உள்ளார். 133 அதிகாரத்தில் உள்ள 1330 திருக்குறளையும் 133 மணிநேரத்தில் 17 நாட்களில் எழுதி முடித்துள்ளார். இந்த 133 அடி நீளம் உள்ள திருக்குறள் தாளை திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருந்தார்.

இதுபற்றி சின்னப்பெருமாள் கூறுகையில், ‘‘திருக்குறளை இதுவரை யாரும் செய்யாத அளவில் 133 அடி நீளத்திற்கு பல கலர்களில் எனது கையாலே எழுதியுள்ளேன்.

இன்றைய இளைஞர்கள் அறிவியலின் தொழில் நுட்ப வளர்ச்சியால் கையால் எழுதும் முறையை மறந்து வருகின்றனர். எத்தனை வளர்ச்சி வந்தாலும் கையால் எழுதும் கலையை மறக்கக்கூடாது. எனவே இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக இந்த பணியை செய்துள்ளேன்’’ என்றார்.

Related Stories: