சென்னை: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் சகோதரர் ஆதம் பாஷா கைது செய்யப்பட்டார். சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.யும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பொழுது, சென்னை கூடுவாஞ்சேரி அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் மஸ்தான் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவர்களுடைய உறவினர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் சந்தேக மரணம் என மாற்றி கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட மஸ்தான், கொலை செய்தது கண்டுபிடிக்கபட்டது. கார் ஓட்டுனர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர், சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்தானின் சகோதரின் மருமகன், கார் ஓட்டுநர் உள்பட 5 பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமானது.
இந்நிலையில், முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் சகோதரர் ஆதம் பாஷா கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மஸ்தான் சகோதரரை போலீஸ் கைது செய்தது. செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்து போலீஸ் நடத்திய விசாரணையில் மஸ்தான் சகோதரருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. ரூ.5 லட்சம் கடனை திருப்பிக் கேட்டதால் அண்ணன் மஸ்தானை கொலை செய்ததாக ஆதம் பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.