மழை வெள்ளத்தால் பாதித்த தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக அறிவிக்க வேண்டும்: சட்டப்பேரவையில் க.சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில்  நேற்று உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர் (திமுக) பேசியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நெல்  கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென்று பேசினேன். ஆனால், அன்றைய  காலக்கட்டத்தில் 8 இடங்கள், 10 இடங்களில் நெல் கொள்முதல் திறந்தாலே பெரிய  விஷயம். இப்போது செங்கல்பட்டு மற்றும்  காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 188 நெல் கொள்முதல் நிலையங்கள்  திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு, சன்ன ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.20.60 காசு  கொடுக்கின்றது. ஆனால், இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக ஒரு  ரூபாய் சேர்த்து ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.21.50 ஆகவும், குவிண்டாலுக்கு ரூ.2,160 வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை பெய்த மழையில், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு  மாவட்டங்களுக்கான சாலையில் இரும்புலிச்சேரி தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு  போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதேபோல், வள்ளிபுரம் - ஈசூர் பகுதியிலும்  ஒரு தரைப்பாலமும், வாலாஜாபாத் அவலூரில் ஒரு தரைப்பாலமும் பாதிக்கப்பட்டன.  அவற்றையெல்லாம், நிவர்த்தி செய்து தர வேண்டும். காஞ்சிபுரம் தொகுதி,  பெரும்பாக்கம் என்ற பகுதியிலும் ஒரு தரைப்பாலம் பாதிக்கப்பட்டது. ஆகவே,  பாதிக்கப்பட்ட தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக அறிவிக்க வேண்டும் என்று  கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.  

Related Stories: